ஆற்றல்களை வளர்த்தல் மற்றும் சுற்றுலாத்துறையில் வாய்ப்புகளை உருவாக்குதல்

‘உள்ளடக்கிய வளர்ச்சிக்கான திறன்கள்” (Skills for Inclusive Growth) என்பது அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் சுற்றுலாத்துறைசார் திறன்களுக்கான பயிற்றுவிப்பு, தொழில் உருவாக்கம் மற்றும் வணிக விருத்தி என்பவற்றுக்கு ஆதரவு அளிக்கும் ஒரு நிகழ்ச்சித்திட்டமாகும். இந்நிகழ்ச்சித்திட்டமானது அவுஸ்திரேலிய அரசும் இலங்கை திறன் விருத்தி, தொழில்வாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சும் இணைந்து நடாத்தும் ஒன்றாகும்.

2017 ஆம் ஆண்டில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து சுற்றுலாத்துறையின் பல்வேறு துறைசார்ந்து – அது உணவு மற்றும் குடிபான விநியோகம் முதல் சுற்றுலாப் பயணங்கள், கலாசார நடவடிக்கைகள் மற்றும் உள்ளடக்கங்களை உருவாக்குதல் வரையான- சகல திறன் விருத்தி முன்னெடுப்புகளுக்கும் உதவிவருகின்றது. சுற்றுலாத்துறைசார் திறன்களின் விருத்திக்கான வாய்ப்பினை வழங்குவதானது வளர்ந்து வருகின்ற, பன்முகத் தன்மை கொண்ட சுற்றுலாத்துறைச் சந்தையின் தேவைகளை சிறப்பாக பூர்த்திசெய்வதற்கு தனிநபர்கள் மற்றும் வணிக முயற்சிகளுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் என்பதை இந்நிகழ்ச்சித்திட்டம் உறுதியாக நம்புகின்றது.

‘உள்ளடக்கிய வளர்ச்சிக்கான திறன்கள்” பெண்கள் மற்றும் இலயலாமை உடையவர்களது தொழில் நிலையை மேம்படுத்துவதற்கு உதவும் வகையில் அவர்களுக்கு தொழில்சார் மற்றும் தொழிநுட்ப பயிற்றுவிப்புகளை வழங்குவதில் கூடுதல் கவனம் செலுத்துகின்றது. இந்நிகழ்ச்சித்திட்டமானது முறைசாரா துறைகளில் ஈடுபடும் குறைந்த வருமானங்களை ஈட்டும் தனிநபர்களுக்கு வாய்ப்புக்களை உருவாக்குவதற்கும் வசதிகளை செய்து கொடுக்கிறது. மட்டுமன்றி, அரச மற்றும் அரச சார்பற்ற பங்குதாரர்களின் பங்குபற்றுதலுடன் நாடளாவிய ரீதியில் பல்வேறு சமூகங்களும் பிரதி பண்ணும் வகையில் உள்ளடக்க மாதிரிகளை உருவாக்கி வைத்திருக்கிறது.

இலங்கையைப் பொறுத்தமட்டில் சுற்றுலாவில் பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கம் என்பதன் உண்மையான அர்த்தம் என்ன என்பதையும் தற்போது நாம் இந்த விடயத்தில் எங்கு நிற்கிறோம் என்பதையும் புரிந்துகொள்வதற்காக, வளர்ச்சிக்கான திறன்களின் திட்டமிடல், சேர்த்தல் மற்றும் பெறுபேறுகள் பிரிவின் மூத்த முகாமையாளர் ஷரண்யா ரவிக்குமாரிடம் பேசினோம்.

சுற்றுலாத்துறை பெறுமதி தொடரின் மரபு சாரா வாய்ப்புக்கள்

சுற்றுலாத்துறை தொழில்கள் என்றதுமே பெரும்பாலானோர் தங்குமிடவசதிÆவிருந்தோம்பல் துறைகள் என்பவற்றில் காணப்படும் வாய்ப்புகளையே உள்ளடக்குவதாக கருதுகின்றனர். சுற்றுலாத்துறை என்பது தங்குமிட சேவைகளை விட அதிகமானது என்பதை மக்களுக்கு புரியவைக்க S4IG இன் தகவல் தொடர்பாடலின் முக்கிய பகுதி உதவியாக இருந்து வருகிறது. சுற்றுலாத்துறையின் பெறுமதி தொடரின் துணை துறைகளில் – உணவு மற்றும் குடிபானம், போக்குவரத்து, கலாசாரம், கலை மற்றும் கைப்பணி, விவசாயம் – காணப்படும் வாய்ப்புக்களை மக்களை காணவைப்பது எமக்கு முன்னால் உள்ள சவால்களில் ஒரு பகுதியாக உள்ளது என ஷரண்யா விபரிக்கிறார்.

ஏலவே சமூகத்தில் காணப்படும் வளங்களை வைத்து சமூக சுற்றுலா நடவடிக்கைகளில் ஈடுபடமுடியும் என்பதை S4IG தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வருகின்றது. உதாரணமாக – மீன் பிடிக்கும் அனுபவம், உள்ளுர் பண்ணை விஜயம், பாரம்பரிய சமையல் வகுப்பு, கலாசார நிகழ்வு அல்லது உள்ளுர் கைப்பணி என்பவைகளை சுற்றுலாத்துறை தயாரிப்புகளாக மாற்றி சமூகத்தினுள்ளேயே வருமானம் பெறும் வாய்ப்புக்களாக மாற்றிக்கொள்ள முடியும்.

எம்மிடம் ஏற்கனவே, பெண்கள் மற்றும் இயலாமையுடன் கூடியவர்கள் சுற்றுலாத்துறையில் ஈடுபகின்றனர் என்பதற்கான மாதிரிகள் உள்ளது. அவர்களது சொந்த அனுபவங்கள் ஏனையவர்களுக்கு உந்துதலாகவும் சாத்தியமானவை என்பதற்கான உதாரணங்களாகவும் அமையலாம். ஏனைய பெண்களைப் போலவே கிரித்திகா தனக்கான வாய்ப்புக்களை எவ்வாறு ஏற்படுத்திக் கொண்டார் என்பது பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்கள்.

சுற்றுலாத்துறைக்கான விஷேட திறன்களை மேம்படுத்தல்

சுற்றுலாத்துறையின் துணைத்துறைகளில் காணப்படும் பல்வேறு வாய்ப்புகளுக்கு அவசியமான பலதரப்பட்ட திறன்களை வளர்ப்பதிலும் S4IG கவனம் செலுத்துகிறது. ஷரண்யா சொல்வது போல அவர்கள் இனியும் ஒரே மாதிரியான தொழில்களை மாத்திரம் ஊக்கப்படுத்துவதில்லை.

சுற்றுலாத்துறை சார்ந்த குறைந்த திறன்களுடன் தொடர்புடைய தொழில்களை விட்டுவிட்டு அதிகம் திறன்களை கொண்டவர்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் இயலாமையுடையவர்கள் பக்கம் அவர்கள் நகர ஆரம்பித்துள்ளனர். இத்துறையில் உயர்திறன் உடையவர்களுக்கு காணப்படும் வாய்ப்புக்களை காண்பித்துக்கொடுப்பதே இதன் நோக்கமாகும். இதன் மூலம் குறைந்த திறனுடைய தெரிவுகளை அவர்கள் மேற்கொள்வதை விட்டுவிட்டு அவர்களுக்கு ஒரு வாய்ப்பளிக்க முடியும். இவ்வாறு நாம் முன்னெடுத்த முயற்சிககளில் ஒன்றுதான், அம்பாறையிலுள்ள பெண்கள் சர்ப் கிளப் (women’s surf club) மற்றும் தொழிநுட்ப நிகழ்ச்சிகளில் பெண்கள் என்பன. அது போலவே கிழக்கு மாகாணத்திலுள்ள பெண் சுற்றுலா வழிகாட்டிகள்.

இந்த பிரிவுகளுக்கு திறன்களின் போதாமை மற்றொரு பெரிய சவாலாகும். பல பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி நபர்கள் இந்தத் துறையில் பணியாற்றுவதற்கான ஆர்வமும் உந்துதலும் கொண்டவர்கள், ஆனால் வாயிலைத் திறக்க தேவையான சிறப்புத் திறன்கள் இவர்களிடம் இல்லாதுள்ளது. ஒரு சில சுற்றுலாத்துறை செயற்பாட்டாளர்களே இந்த குழுக்களுக்கான வேலைவாய்ப்பு தொடர்பான வாய்ப்புகள் மற்றும் இடைக்காலப் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி திட்டங்கள் போன்ற பயிற்சிகளை கொண்டுள்ளனர். இதனுடன் சேர்த்து, விழிப்புணர்வு மற்றும் தகவல்கள் இன்மை, தொழில்வழிகாட்டல்கள் இன்மை, இயலாமையினால் ஏற்படும் வரையறைகள் போன்ற காரணங்களினால் முறையான திறன்களை பெறுவதிலோ அல்லது தொழில் பயிற்சிகளை பெறுவதிலோ வரையறைகள் இருக்கலாம்.

இதை முன்னரே கண்டறிந்த S4IG இதற்கான தீர்வாக பெண்கள் மற்றும் இயலாமை உடையவர்களும் இத்துறையில் நுழைவதற்கான திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான பல நிகழ்ச்சிகைளை உருவாக்கியது. தேசிய தகைமை சட்டகமானது இயலாமையுடன் உள்ளவர்களுக்கு பெரும் தடையைக் கொண்டதாக அமைக்கப்பட்டிருந்தது. காரணம் அவர்களது சகல மதிப்பீடுகளும் எழுத்துவடிவில் செய்யப்படவேண்டியிருந்தது. இதை உணர்ந்த S4IG யானது மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவினை (TVEC) இது விடயத்தில் அணுகியது. இதன் பலனாக இயலாமையுடையவர்களுக்கான நியாயமான இட ஒதுக்கீடு வழங்கும் புதிய கொள்கையை அவர்கள் மனமுவந்து உருவாக்கியதுடன் இயலாமை உடையவர்கள் மாற்றுவழிகளில் தமது பரீட்சைகளை பூரணப்படுத்துவதற்கான வாய்ப்பை இது வழங்கியது. அனைத்து மாணவர்களும் எழுத்துத் தேர்வில் அமரத் தேவையில்லை, ஆனால் அவர்களின் வரம்பைப் பொறுத்து மதிப்பீட்டாளர் முடிவெடுத்து மதிப்பீட்டை முடிக்க நியாயமான இடவசதியை வழங்க முடியும்.

Kavitha, participating in Supreme Chef Season One second round selection process.

அனைவரையும் உள்ளடக்கிய மனித வள கொள்கைகளின் முக்கியத்துவம்

சுற்றுலாத்துறையில் நுழைய விரும்பும் பெண்கள் மற்றும் இயலாமையுடையவர்களை நுழையவிடாது தடுக்கும் பிரதான விடயம் சிறந்த மனித வள நடைமுறைகள் என்ற அடிப்படையில் முறையான கொள்ளைச் சட்டகம் இன்மையும், இவற்றைக் கண்காணி ப்பதற்கான அமைப்பு ரீதியான கட்டமைப்புகள் காணப்படாமையுமாகும். பெண்கள் மற்றும் இயலாமையுடையவர்களை நியாயமான அளவில் சேர்த்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஆனால் இவற்றை செய்விப்பதற்கான நடைமுறை வழிகாட்டல்களோ மற்றும் சட்ட ஏற்பாடுகள் எதுவுமோ இங்கில்லை.

பல சிறு வணிகங்கள் பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை செய்ய உதவும் சூழலை உருவாக்குவது முக்கியம் என்று நினைக்கவில்லை. அவ்வாறு உருவாக்கப்பட்ட சூழல் ஒன்றானது, வேலைசெய்யும் நிலைமை, புறம்பான கழிவறைகள் அல்லது உடைமாற்றும் அறைகள், இயலாமையுடையவர்கள் உபயோகிக்கும் வகையிலான கருவிகள் என்பவற்றை கொண்டிருக்க வேண்டும். உதாரணமாக – சமையலறையில் நீண்ட நேரம் நின்று பணிபுரிய வேண்டும். ஆனால் செயற்கை அவயவம் பொருத்தப்பட்ட ஒருவரால் அவ்வாறு செய்ய முடியாது. எனவே அவ்வாறு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அசைவியக்கம் கொண்டவர்களுக்காக வேறுவிதமான உதவிகள் அல்லது கருவிகள் அங்கு காணப்பட வேண்டும். இவ்வாறான பணியாளர்கள் முகங்கொடுக்கம் மற்றுமொரு சவால் முறையான ஒப்பந்தகள் இன்மை, குறிக்கப்பட்ட வேலை நேரங்கள் இன்மை, குறைந்த வேதனம், மற்றும் சமூக களங்கங்கள், அணுகுமுறை தடைகள் போன்ற பல பாகுபாடுகள் என்பனவாகும்.

இது தொடர்பாக விரிவான ஆய்வினைச் செய்த S4IG யானது விருந்தோம்பல் துறைசார்ந்து சிறந்த மனிதவள அணுகுமுறைக்கான கையேடு ஒன்றை உருவாக்கியது. இக்கையேட்டுக்கான சுற்றுலாத்துறை அதிகார சபையின் அங்கீகாரத்தை பெறுவதற்கான முஸ்தீபுகளில் அவர்கள் தற்போது ஈடுபட்டுவருகின்றனர். அவ்வாறு கிடைக்கும்பட்சத்தில் இத்துறைசார்ந்து அவற்றை அமுல்படுத்த முடியும்.

இதன் அர்த்தம் என்னவெனில், ஒரு புதிய தொழில் முயற்சி சுற்றுலாத்துறை அதிகார சபையுடன் பதிவு செய்துகொள்ளும் போது இந்த கையேட்டை அமுல்படுத்த வேண்டிய கடப்பாட்டுக்கு அவர்கள் உள்ளாவார்கள். தேவைப்பட்டால் அவர்கள் ஒரு சிறிய மனித வள கற்கைநெறியை பின்தொடர வேண்டி வரலாம். மனித வள முகாமை தொடர்பில் எழும் சிக்கல்கள் குறிப்பாக பாதிப்புகளுக்கு உள்ளாகக் கூடியவர்கள் விடயத்தில் எழும் சிக்கல்கள் தொடர்பான சிறந்த புரிதல் அவர்களுக்கு இதன் மூலம் கிடைக்கும்.

Participant Sinthujah, Workplace-based Basis Skills Development Project – Housekeeping Unit, JKAB Park & Beach Resort, Trincomalee.

கொவிட் 19 உம், பெண்கள் மற்றும் இயலாமையுடையவர்களது வேலைவாய்ப்பில் அது செலுத்தியுள்ள தாக்கமும்.

கொவிட் 19 ஆனது, சுற்றுலாத்துறையிலுள்ள பெண்கள் மற்றும் இயலாமையுடையவர்களது தொழில் விடயத்தில் விரும்பத்தகாத தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. நகர்ப்புற ஹோட்டல்களில் பணிபுரிந்து வந்த அதிகமான பெண்கள் தம் தொழில்களை இழந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இத்தொழில்களை பெறுவதற்கு அவர்கள் செய்த அத்தனை முயற்சிகளும் இப்போது வீணாகியுள்ளது.

கொவிட் நிலையைத் தொடர்ந்து ஏற்பட்ட பயணத்தடைகளால் சிறு தொழில் முயற்சியாளர்கள் சிரமங்களை எதிர்நோக்குவதால் அவர்களது ஆளணியைக் குறைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அவர்கள் ஆளாகியுள்ளனர். எஞ்சியவர்கள் வியாபாரத்தை கொண்டு செல்வதற்காக வேண்டி பலதரப்பட்ட பணிகளையும் செய்ய வேண்டியுள்ளது. பெண்கள் மற்றும் இயலாமை உடையவர்களுக்கு இது பெரும் சவாலாகும். காரணம், சில பணிகளைச் செய்வதற்கான திறன்கள் அவர்களிடம் இல்லை அல்லது பௌதீக ரீதியாக அவர்களால் செய்ய முடியாதிருப்பதாகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இந்த தொழிலாளர்கள்தான் முதலில் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள்.

இத்தடைகளை மிகைப்பதாயின் இச்சாராருக்கு பலதரப்பட்ட திறன்களையும் பெறுவதற்கான பயிற்றுவிப்புக்களை வழங்க வேண்டும் என S4IG நம்புகிறது. இதனால் தொழில் வழங்குனர்களுக்கு அவர்களை வைத்திருக்க வேண்டிய தேவை உருவாகிறது. அதேநேரம் இச்சூழலில் இத்துறையில் எழுந்துள்ள இடைவெளிகளை பெண்கள் மற்றும் இயலாமையுடைவர்கள் இனங்காண்பதுடன் அவற்றை நிரப்புவதற்கான வாய்ப்புக்களை அவர்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதனையும் S4IG மேலும் நம்புகிறது. உதாரணமாக, “கொவிட் நிலைக்குப் பிந்திய சூழலில் உள்நாட்டு வெளிநாட்டு பிரயாணிகளை கவரும் வகையில் பிரயாண தளங்கள் தொடர்பான ஊக்குவிப்புகள் முக்கியமான ஒன்றாக அமையப் போகிறது. ஒரு இடத்தின் தனித்துவமான பண்புகளின் உண்மையான மற்றும் சுவாரஸ்யமான விளக்கக்காட்சி முக்கியமானது, குறிப்பாக உள்நாட்டு பயணிகளை குறிவைக்கும் போது.” என ஷரண்யா குறிப்பிடுகிறார்.

இதற்கு பல புத்தாக்க சிந்தனைகளும், புதிய திறமைகளும் தேவை. தொழில் நுட்பத்தினை பிரயோகிக்க வேண்டும். பிராந்தியங்களில் நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய வேண்டும். பங்குதாரர்களை (தனியார், தனவந்தர்கள், முதலீட்டாளர்கள்) சேர்த்துக் கொள்ள வேண்டும். கூடவே பிராந்தியங்களில் சுற்றுலாத்தள ஊக்குவிப்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கு பேச்சுவார்த்தைகள் செய்வதற்கான திறன் மற்றும் தலைமைத்துவ ஆற்றல் என்பன மிகவும் முக்கியமாக துணைபுரியும். பெண்கள் மற்றும் இயலாமையுடையவர்கள் இவ்வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என S4IG சிபாரிசுசெய்கிறது. காரணம் இவற்றை செய்வதற்கு ஒரு வணிக பதவியோ அல்லது முறையான தொழில் ஒன்று அவசியம் இல்லை. சந்தைப்படுத்துவது, வணிக மேம்படுத்தல், சுற்றுலாத்தளம் பற்றிய ஒளிப்படக்காட்சிகள், சமூக ஊடக பதிவுகள், கலாசார நிகழ்வுகள் போன்ற இன்னும் பல விடயங்களை வீட்டில் இருந்தவாறே செய்ய முடியும். விஷயங்களைச் செய்ய ஆர்வமும் உந்துதலும் உள்ள நபர்களை வைத்தும் இவற்றை மேற்கொள்ளலாம்.

S4IG முன்னெடுத்துள்ள இம்முயற்சியானது ஆரம்ப கட்டமே. தற்சயமம் நான்கு மாவட்டங்களுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இத்தனை ஆண்டுகளில் இந்நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் பெறப்பட்ட அனுபவங்கள், வெற்றிகள், கற்றுக்கொண்ட விடயங்கள் அனைத்தும் இங்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் எந்தவொரு பாகத்திலும் குறிப்பாக வறிய சமூகங்கள் காணப்படும் இடங்களில் இம்முயற்சியை நடைமுறைப்படுத்த இவற்றை துணையாகக்கொள்ள முடியும்.

சுற்றுலாத்துறையானது சமூக, பொருளாதாரத்தில் எத்தகைய தாக்கத்தை செலுத்தவல்லது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதே நேரம், சுற்றுலாத்துறையில் அனைவரும் ஈடுபட வேண்டுமாயின் அனைவரையும் உள்ளடக்கும், சகலருக்கும் சமவாய்ப்பளிக்கும் மனநிலையுடன் பொருத்தமான பயிற்றுவிப்புக்களை செய்து மக்களுக்கும் கட்டமைப்புகளுக்கும் அதிகாரமளிக்கும் வளங்கள் மற்றும் முயற்சிகளில் நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

Sharanya.Ravikumar@inclusivegrowth.com.lk

எம்மைப்பற்றி மேலும் அறிந்துகொள்ளவும் எம்மோடு இணைந்து செயற்படவும் விரும்பினால் மின்னஞ்சல் மூலம் ஷரண்யாவைத் தொடர்பு கொள்ளவும். Sharanya.Ravikumar@inclusivegrowth.com.lk