பயணச்சீட்டு முகவர்
பயணச்சீட்டு முகவர்கள் விமான நிலைய கவுண்டர்களில் அல்லது விமான நிறுவனங்களால் இயக்கப்படும் பிற நியமிக்கப்பட்ட விற்பனை மையங்களில் பணி புரிகின்றார்கள். அவர்கள் பயண நிறுவனங்களுக்கும் சில சமயங்களில் பெரிய ஹோட்டல்களுக்கும் கூட பணி புரியலாம். பயணச்சீட்டு முகவர்கள் வாடிக்கையாளர்களுக்கும் பயணிகளுக்கும் தங்கள் விமான முன்பதிவுகளை மேற்கொண்டு உதவுகிறார்கள். அவை திகதிகள், அட்டவணைகள், கிடைப்பனவு மற்றும் விமானப் பயணச் சீட்டுக்களின் விலைகள் பற்றிய தகவல்களை வழங்குகின்றனர். அவர்களில் பலர் பயணப்பொதிகள், நிறுத்தங்கள் போன்ற விடயங்களில் ஆலோசனை வழங்குவார்கள்.

1. வேலைப் பாத்திரங்கள்
இந்தத் துறையிலுள்ள பலர் பயிலுநர் பதவிகளுடனே ஆரம்பித்து அனுபவத்துடன் சிரேஷ்ட நிலைகளை அடைகின்றனர். சம்பள அளவானது கம்பனிக்குக் கம்பனி வேறுபடலாம் என்பதுடன் சில நிறுவனங்கள் பயணச்சீட்டு முகவர்களை வெளிநாட்டுப் பயிற்சிகளுக்கு அனுப்பலாம்.

2. தொழில் முன்னேற்றம்
இந்த தொழிலுக்கு தெளிவாக வரையறுக்கப்பட்ட பாதை இல்லை. நீங்கள் எந்தளவு நீண்ட காலம் ஒரு பயணச்சீட்டு முகவராக பணிபுரிகிறீர்களோ, அந்தளவிற்கு விசாரணைகளைக் கையாள்வதிலும், அவற்றிற்குப் பதிலளிப்பதிலும், பயணிகளுக்கு அவர்களின் பயணத்திட்டங்களைத் தக்கவைத்துக்கொள்வதிலும் நீங்கள் அதிக அனுபவம் வாய்ந்தவர்களாக ஆகிவிடுவீர்கள். இதன் பொருள் நீங்கள் சிரேஷ்டத்துவத்தில் உயர முடியும், ஆனால் உங்கள் பதவி மாறுவதற்கான சாத்தியம் இல்லை.

3. அறிவும் திறன்களும்
ஏனைய அதிகமான தொழில்களைப் போலவே, இந்தத் தொழிலையும் கருத்தில் கொள்ள உங்கள் சாதாரண தரப் பரீட்சையை முடித்திருக்க வேண்டும். அதன்பிறகு, கணினியை இயக்குதல், குறிப்பிட்ட முன்பதிவு முறைகளைப் பயன்படுத்துதல் போன்ற தொழில்நுட்ப திறன்களை நீங்கள் பெற வேண்டும். நாட்டிலுள்ள மிகவும் பிரபலமான நிறுவனங்களில் ஒன்று சர்வதேச விமானப் பயணச்சீட்டு அகாடமி ஆகும், இது இந்த துறையில் ஒரு தொழிலைத் தொடர உதவும் பல கற்கைநெறிகளைக் கொண்டுள்ளது. நீங்கள் பணிபுரிய வேண்டிய பெரும்பாலான முறைமைகள் ஆங்கிலத்தில் உள்ளதால் நீங்கள் நிச்சயமாக ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3.1 திறன்கள்
- மிகச் சிறந்த வாடிக்கையாளர் சேவை
- மிகச் சிறந்த வாய்மூல, எழுத்துமூலத் தொடர்பாடல்
- கணணித் திறன்கள் போன்ற தொழில்நுட்பத் திறன்கள்
- நம்பகத்தன்மை
- நேர்மை
- ஒத்துழைப்பு
- நேர முகாமைத்துவம்
- பிரச்சினை தீர்த்தல்
- கணிதம்

4. பணியமர்த்தல் செயல்முறை
சுற்றுலா முகவர்கள் போன்ற ஏனைய தொழில்களைப் போன்றே, நீங்கள் பயிற்சியை முடித்து சான்றிதழ் கையிலிருப்பின், நீங்கள் தொழிலை ஆரம்பிக்கத் தயாராகவுள்ளீர்கள். வாடகை- வாகனங்கள் போன்ற துணைச் சேவைகளை வழங்கும் முக்கிய நிறுவனங்களிலிருந்து பெரிய சுற்றுலா நிறுவனங்கள் வரை பல்வேறு நிறுவனங்களால் நீங்கள் பணியமர்த்தப்படலாம். இந்த துறையில் தொழில்கள் பொதுவாக மிகவும் கட்டமைக்கப்பட்டவையாகவுள்ளதுடன் நீங்கள் நாளொன்றிற்கு, முன்னர் தீர்மானிக்கப்பட்ட மணிநேரங்களுக்குப் பணியாற்றுவீர்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நீங்கள் விண்ணப்பிக்கும் நிறுவனத்தின் அளவைப் பொறுத்து, உங்களை மனிதவள முகாமையாளர் அல்லது முகாமைத்துவப் பணிப்பாளர் நேர்காணல் செய்யலாம்.

5. சம்பள அளவு
நீங்கள் வேலை செய்ய விண்ணப்பித்த நிறுவனம் மற்றும் உங்களுக்குள்ள அனுபவத்தைப் பொறுத்து, உங்கள் சம்பளம் ரூ .30,000 இற்கு அதிகமாக இருக்கலாம். இலவச சுற்றுப்பயணங்கள், விமான பயணச்சீட்டுக்களில் கழிவுகள் மற்றும் நிறுவனம் வழங்கும் பிற கொடுப்பனவுகள் போன்ற பிற சலுகைகளும் இருக்கலாம். தொழிலுக்கு நேர்காணல் செய்யும் போது அந்த விவரங்களை நீங்கள் கேட்கலாம். நீங்கள் முறையாகப் பயிற்சி பெறுவதற்காக ஆறு மாதங்களுக்கு ஒரு தகுதிகாண் காலத்தில் வைக்கப்படுவீர்கள்.